மெரினாவில் பீகார் வாலிபர் சரமாரி குத்திக் கொலை பெண்களுடன் தொடர்பு காரணமா?
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் பீகார் மாநில வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
வாலிபர் பிணம்
சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் விவேகானந்தர் இல்லம் எதிரில் நேற்று காலை வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவர் அருகே பை ஒன்று கிடந்தது. மெரினாவுக்கு நடைபயிற்சி சென்றவர்கள் வாலிபரின் உடலை பார்த்து மெரினா போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார். வாலிபரின் உடலில் கழுத்து உள்பட 10 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
டெய்லர் தொழில்
வாலிபரின் உடல் அருகே கிடந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் அவரது ஆதார் அட்டை இருந்தது. அதன்மூலம் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த நூர்உசைன் அன்சாரி (வயது 27) என்பது தெரிந்தது.
விசாரணையில், அன்சாரி விவேகானந்தர் இல்லம் பின்பக்கம் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவருடன் அவரது அண்ணன் அகமது அன்சாரியும், இன்னொரு உறவினரும் தங்கியுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் அன்சாரி டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரது மனைவியும், குழந்தையும் சொந்த ஊரில் வசிப்பதும் தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அன்சாரி வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் அவரது அண்ணன் செல்போனில் தொடர்பு கொண்டபோதும் அன்சாரி போனை எடுக்கவில்லை.
பெண்களுடன் தொடர்பா?
அன்சாரி கொலை செய்யப்பட்டு கிடந்தவிதம் பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி மெரினாவில் அன்சாரி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source by: http://www.dailythanthi.com/News/Districts/2017/02/04012851/In-MarinaBihar-youthStabbed-and-killed.vpf
No comments:
Post a Comment
Comment here