வடபழனியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? பரபரப்பு தகவல்
தொடர் போராட்டம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி சில தினங்களாக சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை போலீசார் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தியபோது கலவரம் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக சென்னை முழுவதும் போராட்டம் நடந்தது.
வடபழனி சிக்னல் அருகே 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே வடபழனி போலீசார் கார், மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் ஏராளமானோர், போலீசார் வந்த வாகனங்களை வழிமறித்தனர்.
தீயிட்டு எரிப்பு
இதையடுத்து போலீசார் செய்வது அறியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் வந்த கார், மோட்டார் சைக்கிளை போராட்டக்காரர்கள் சாலையில் கவிழ்த்து விட்டு தீயிட்டு எரித்தனர்.
இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் அதிக அளவில் அங்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
உடனே அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் போராட்டக் காரர்கள் உயிருக்கு பயந்து தலைதெறிக்க ஓடினர்.
இதை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை வடபழனி போலீசார் பிடித்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் மீண்டும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
No comments:
Post a Comment
Comment here