40 மணிநேரம் இடைவிடாமல் 'யோகா' செய்து இந்தியர் கின்னஸ் உலக சாதனை
ஹாங்காங்,
ஹாங்காங்கில் நடந்த ஆண்களுக்கான நீண்ட நேர யோகா மராத்தான் போட்டியில் இந்திய யோகக்கலை ஆசிரியர் சி.பி.யோகராஜ் 40 மணிநேரம் இடைவிடாது 1500-க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார். சிம் ஷா சூயி ஸ்டுடியோவில் ப்ராணா யோக நிலையில் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்போரை வியக்கச் செய்துள்ளார் யோகராஜ்.
5 வயதிலேயே யோகப்பயிற்சியை முறையாக கற்கத்துவங்கிய யோகராஜ் 12-வது வயதிலேயே யோகாவை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அந்த அளவுக்கு யோகக்கலையை நுணுக்கமாக கற்றவர். யோகராஜின் தந்தை சிதம்பரம் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். சிறுவயதிலேயே தந்தையிடமிருந்து பல யோகப்பயிற்சிகளை கற்றுக்கொண்டார் யோகராஜ். அதன்பிறகு, கேரளாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற யோகா ஆச்சார்யா ஏ.யேசுதாஸ் அந்தோணியிடம் யோகா பயின்றார்.
கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் பல்வேறு யோகப்போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். 1991-ம் ஆண்டு யோகாவிற்கான தமிழ்நாட்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் யோகக்கலையை பயிற்றுவித்து வரும் யோகராஜ் ஏற்கனவே, 2009, 2011 ஆண்டுகளில் கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியவர். Creative & innovative Award By Pure Yoga International -2006 விருதையும், International Best Yoga Demonstrator விருதையும் வென்றவர்.
இந்த போட்டிக்கு முன்னதாக அவர் கூறுகையில், 'ஒருவேளை கின்னஸ் சாதனையை நான் முறியடித்தால் அந்த பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கே சென்றடைய வேண்டும். ஏனென்றால், அவர்தான் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ஐ 'ஐ.நா' அறிவிக்க காரணமாக இருந்தவர். யோகாவுக்கு அது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம். உலக அளவுக்கு யோகாவை கொண்டு சென்ற பிரதமருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.' என்றார்.

No comments:
Post a Comment
Comment here